தமிழ்நாடு

 “மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி பணிநீக்கம் செல்லும்” - சென்னை உயர்நீதிமன்றம் 

 “மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி பணிநீக்கம் செல்லும்” - சென்னை உயர்நீதிமன்றம் 

webteam

வழக்கறிஞரை செல்போனில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக, மேலூர் ஜுடீஷ்யல் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய மகேந்திர பூபதி, தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக வழக்கறிஞர் அமலன் என்பவர் உயர் நீதிமன்றத்துக்கு புகார் அனுப்பினார். அதேபோல, குற்ற வழக்கில் தொடர்புடைய மேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த புகார்களை விசாரித்த உயர்நீதிமன்ற கண்காணிப்பு பதிவாளர், மாஜிஸ்திரேட்டை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அதற்கு உயர்நீதிமன்ற முழு அமர்வு ஒப்புதல் அளித்ததை அடுத்து, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை பணிநீக்கம் செய்து தமிழக அரசு, கடந்த 2018 ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் நியமிக்க கோரி மகேந்திர பூபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து, மனுதாரருக்கு போதுமான வாய்ப்பு வழங்கிய அனைத்து நடைமுறைகளும் பின்பற்றிய பிறகே, பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள், தங்கள் பணியின் போது, அதிகபட்ச நேர்மையை கடை பிடிக்க வேண்டும் எனவும், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நேர்மை சம்பந்தப்பட்டது என்பதால் அவருக்கு எதிரான பணிநீக்க உத்தரவு அதிகபட்சமானதல்ல எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.