கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில் உறுப்பினராக இல்லாத கட்சியின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிக்க கூடாது எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் எனக் கோரியிருந்தார். மேலும், பெரிய கட்சியில் சேர்ந்துவிட்டு அவர்களுக்கான சின்னத்தில் தோழமைக் கட்சிகள் போட்டியிடுவதால், சுயேச்சைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார் எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றனர். அத்துடன் கூட்டணியில் போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.