தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு? - முழுமையான அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவு

webteam

அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் போராட்டங்கள், மாநிலத்தை பின்னோக்கி எடுத்துச் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.ம.மு.க சார்பில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் டிடிவி தினகரன் தலைமையில் ஜூலை 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் என்பதாலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியுள்ளதாலும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, மாநிலத்துக்கு வரும் நல்ல திட்டங்களை பொத்தாம் பொதுவாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார். அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் இதுபோன்ற போராட்டங்கள் மாநிலத்தை பின்னோக்கி எடுத்துச்செல்லும் எனவும் நீதிபதி கவலை தெரிவித்தார்.

தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால், எந்த திட்டத்தைத்தான் தமிழகத்தில் நிறைவேற்றுவது என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்பதை முழுவதுமாக ஆராய்ச்சி செய்துவிட்டு தெரிவிக்கும்படி வழக்கை ஒத்தி வைத்தார்.