தமிழ்நாடு

மாணவர்கள் கடன் கேட்டால் மறுக்க தெரிகிறது - எஸ்.பி.ஐ வங்கியை வெளுத்து கட்டிய உயர்நீதிமன்றம்

webteam

கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுக்கத் தெரியும் வங்கிகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கடன் என்றால் மறுப்பதாக உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், கனிஷ்க் கோல்ட் நிறுவன சொத்துக்களை முடக்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி 13 வங்கிகள் சார்பில் பாரத ஸ்டேட் வங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கனிஷ்க் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கிக்கு ரூ.820 கோடி அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாகவும், அமலாக்கப் பிரிவு உத்தரவால் கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கோடிக்கணக்கான பெரிய தொகைகளை சரியான ஆதாரங்கள் இன்றி கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கடனாக வழங்கும் வங்கிகள், மாணவர் மற்றும் விவசாயிகள் கடன் கேட்கும் மறுப்பதாக சுட்டிக்காட்டினார். ஒரு ஏழை மாணவர் படிப்பிற்காக பணம் கேட்கும் போது, அவரிடம் ஏரளாமான ஆவணங்கள் கேட்பதும், கேட்கும் கடனைவிட கூடுதல் மதிப்பிலான சொத்து ஆவணத்தை கேட்பதாகவும் சாடினார். ஒரு கட்சிக்கு நிதி அல்லது கடன் அளிக்கும்போது மட்டும் நீங்கள் உடனே அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவதாகவும், இதெல்லாம் என்ன? என்றும் காட்டமாக கூறினார். வங்கி அதிகாரிகளை சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடட்டுமா? அப்போது தெரியும், வங்கி மோசடிக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று வெளுத்து வாங்கினார். மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

கனிஷ்க் கோல்ட் சென்னை உட்பட பல இடங்களில் தங்க நகைக்கடை, நகை செய்யும் தொழில் போன்றவற்றை நடத்தி வந்தது. தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக வங்கிகளிலும் கடன் பெற்றது. ஆனால் வங்கிக்கடன் விவகாரத்தில் பணமோசடி புகார் எழுந்ததை அடுத்து, கனிஷ்க் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. எஸ்பிஐ உள்ளிட்ட 13 வங்கிகளில் இருந்து சுமார் 820 கோடி ரூபாய் கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் கொடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக விஜய் மல்லையா, எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார். வைர வியாபாரி நீரவ் மோடியும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மூலம் பல்வேறு வங்கிகளில் கடன்பெற்று ஏமாற்றிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 

தொழிலதிபர்கள் பலர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் கடன்பெற்று ஏமாற்றும் நிகழ்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடன் கொடுப்பதை கட்டுப்படுத்துமாறு ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. கல்விக்கடன் கொடுப்பதற்குகூட உரிய தகுதி இருக்கிறதா? என்று பார்த்து கடன் வழங்குமாறு உயர்நீதிமன்றம் சார்பில் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் கனிஷ்க் நிறுவனத்திற்கு எந்தவிதமான உரிய ஆவணங்களும் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்துள்ள நிலையில், வங்கி அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களா? என நீதிமன்றத்திற்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.