குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் கடந்த 2016ஆம் ஆண்டு, 2 குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தமனு மீது நடைபெற்ற விசாரணையில், குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் உள்துறை துணை செயலாளர் பதில் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிக்கையில் திருப்தியடையாத நீதிபதிகள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.