தமிழ்நாடு

சென்னை கனமழை: முழுவீச்சில் மீட்புப்பணிகள் – இதுவரை 107 பேரை மீட்ட தீயணைப்புத்துறை

Veeramani

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முழு வீச்சில் மீட்பு பணியில் தீவிரம் காட்டிவரும் தமிழக  தீயணைப்புத்துறை, இதுவரை 107 பேரை மீட்டுள்ளது.

சென்னை நகரில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  அதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் கரன் சின்கா உத்தரவின் பேரில் இணை இயக்குநர்கள் மீனாட்சி விஜயகுமார், ப்ரியா ரவிச்சந்திரன் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் பல குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரம் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலையில் இருந்து தற்போது வரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சென்னையில் 86 இடங்களில் தேங்கி இருந்த தண்ணீரை மோட்டார் மூலமாக அகற்றி உள்ளனர்.  மேலும் தீயணைப்பு துறையினர் 107 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், 16 விலங்குகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். 11 இடங்களில் மரம் விழுந்தது, அதனை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். 11 இடங்களில் சிறிய தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது, விரைந்து சென்று அதனை தீயணைப்பு துறையினர் அணைத்துள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்து 300 தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை இன்று காலை சென்னை தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த 300 பேரையும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்க தீயணைப்புத்துறை முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் சென்னை நகர் முழுவதும் அடைமழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளில் சுமார் 1000 தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு முதல் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சென்னை நகரம் முழுவதும் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.