தமிழ்நாடு

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது: கோர்ட் உத்தரவு

webteam

தமிழக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இம்மாதம் ஒன்றாம் தேதி மூடப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிக்களுக்கு உட்பட்ட சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காக சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது. மாநில நெடுஞ்சாலைகளை மாற்றி அமைத்துக் கொள்ள தமிழக அரசுக்குத் தடையில்லை. சாலைகளை மாற்றி அமைத்தாலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது. கடைகளை மீண்டும் திறக்க மாட்டோம் என தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்காததால் ஜுன் 10ம் தேதி வரை இந்த இடைக்காலத் தடை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.