தமிழ்நாடு

நீதிமன்றத்‌தை அரசியல் களமாக மாற்றுவதா?: திமுக மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

webteam

முரண்பாடான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற திமுக முயற்சி செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற‌ம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி ஜூலை 28 ஆம் தேதி திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன. அதில் கோவையில் நடந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க சென்றார். அங்கு செல்லும் முன் சேலம் கட்சராயன் ஏரியில் மணல் திருட்டு புகார் இருந்த நிலையில் அவ்விடத்தை பார்வையிட ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஸ்டாலின் சேலம் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி காவல்துறையினர் ஸ்டாலினை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கைதை எதிர்த்து திமுக சட்‌டப்பிரிவு வழக்கு தொடர்ந்த நிலையில், ஸ்டாலின் அன்றே விடுவிக்கப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி ரமேஷ் அறிவித்தார். இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி ரமேஷ், சேலம் கட்சராயன் ஏரிக்கு செல்ல ஸ்டாலின் தடுக்கப்பட்ட நிலையில், மனித சங்கிலி நடத்த முயன்றதை தடுத்ததாக குற்றம்சாட்டி திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் முரண்பாடான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்துள்ள திமுக, சென்னை உயர்நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற முயற்சி செய்வதாகவும் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.