தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்

Sinekadhara

சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

2012-ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால், விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் மனு இன்று நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.

இன்று விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார். அதில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை; மதிக்கிறோம். நீதிமன்றத்தை நாடியதற்காக விதித்த ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் தனி நீதிபதியின் விமர்சனங்களை ரத்துசெய்யுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், விஜய்க்கு அபராதம் விதித்தது மற்றும் விமர்சனங்களை நீக்குவது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கமுடியாது என்றும், அதேசமயம், மீதம் செலுத்தவேண்டிய நுழைவு வரியை கணக்கிட்டுத் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே 20% வரியை விஜய் செலுத்தி இருப்பதால் மீதம் எவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்பதை ஒரு வாரத்தில் கணக்கிட்டு தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விதித்த ரூ.1 லட்சம் அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கின்றனர்.