தமிழ்நாடு

கட்டப்பஞ்சாயத்தில் வழக்கறிஞர்கள்: நீதிபதி கிருபாகரன் கவலை

கட்டப்பஞ்சாயத்தில் வழக்கறிஞர்கள்: நீதிபதி கிருபாகரன் கவலை

webteam


வழக்கறிஞர் தொழிலை நம்மாலும் காப்பாற்ற முடியாவிட்டால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன்கிருஷ்ணன் வேறொரு வழக்கிற்காக நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது அவரிடம் சில கருத்துக்களை கூறிய நீதிபதி கிருபாகரன், கல்லூரிக்கே செல்லாமல் சிலர் வழக்கறிஞர் ஆவதால், கட்டப் பஞ்சாயத்து அதிகமாகிவிட்டது. வழக்கறிஞர் தொழிலை நாமே காப்பாற்ற முடியாவிட்டால் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என கவலை தெரிவித்தார்.  பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும் சங்கம் இப்பிரச்னையையும் முன்னெடுக்க வேண்டும் என்றார். 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதத்தை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். கல்லூரிக்கு செல்லாமலே தொலைதூரக் கல்வி மூலம் வேறு மாநிலங்களில் சட்டம் படிப்பவர்களால்தான் இந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதம் கெடுகிறது என கவலை தெரிவித்தார். வேறு பணியில் ஓய்வுபெற்ற பிறகு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுபவர்களை தடுக்க தீர்மானம் இயற்ற வேண்டும் என நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார். நீதித்துறையை நாடி வரும் மக்களை நாம் ஏமாற்றக்கூடாது, அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.