Dhurandhar 2 x page
தமிழ்நாடு

தேர்தல் விதிகள் அமல் |துரந்தர் 2-க்கு தடை கோரி மனு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

துரந்தர் 2 படத்தில் அரசியல் சார்பான கருத்துகள் உள்ளன, பாஜக அரசை பாராட்டுகிறது என அவர் வாதிட்டார்.

PT WEB

தமிழகத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர் 2' படத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளைப் புகழ்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், எந்த காட்சிகள் விதிமீறல் என தெளிவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

தமிழகத்தில் 'துரந்தர் 2' திரைப்படத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் 'துரந்தர் 2'. இத்திரைப்படம் கடந்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த டி.ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Ranveer Singh

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ’துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தேர்தலுக்குப் பின் ’துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.

Ranveer Singh

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் தெளிவாக குறிப்பிடவில்லை என தெரிவித்தனர். மேலும் மத்திய திரைப்படச் தணிக்கை வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.