தமிழ்நாடு

லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி..!

லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி..!

Rasus

ஓவியக் கண்காட்சியில் பிரதமர் மற்றும் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற அனுமதித்ததற்காக லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை, லயோலா கல்லூரியில் ஜனவரி 19, 20ஆம் தேதிகளில் ‘வீதி விருது’ விழா மற்றும் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், பிரதமர் மற்றும் இந்து கடவுள்களை கேலி செய்து ஓவியங்கள் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதையடுத்து, லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பும் கோரியது.

இந்நிலையில், இந்து- கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில், அவதூறு ஓவியங்கள் வைக்க அனுமதியளித்த லயோலா கல்லூரி முதல்வர் மீது குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஓவியங்களை வரைந்து கண்காட்சியில் வைத்த ஓவியர்கள் முகிலன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே லயோலா கல்லூரி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டதால், இதுசம்பந்தமாக பெறப்பட்ட புகார் முடிக்கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.