தமிழ்நாடு

மீண்டும் ஒரு காவல் மரணம்?.. 5வது நாளில் இளைஞர் திடீர் மரணம் - நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

webteam

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தும்படி சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல்துறையில் "காவல்துறையின் நண்பனாக" அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய நித்தியராஜை கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி ஐ.சி.எஃப். காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமலிங்கம் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னர் அவர் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கு சென்ற 5வது நாளே திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருந்த நித்தியராஜ், 2012ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதால்தான், தன் மகன் உயிரிழந்ததாகவும், அதனால் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும், நித்தியராஜின் தாயார் பூங்குழலி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மகனின் மரணத்திற்கு இடைக்கால இழப்பீடாக பத்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மகனை இழந்த தன்னைப் போல நித்தியராஜின் மனைவியும் மற்றும் அவரது 8 வயது குழந்தையும் தவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் இருப்பதாக கூறி ஒருவரை மிரட்டி, செல்ஃபோன் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தான் நித்தியராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவரை பிடிக்க சென்றபோது தப்பித்து ஓடியதால் கீழே விழுந்ததில் நித்தியராஜுக்கு காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தாக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், காவலில் இருக்கும் ஒரு குடிமகனின் வாழ்வதற்கான உரிமையை பறிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நித்தியராஜின் மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என்று புழல் காவல் நிலையத்தினர் பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமெனவும், 8 வாரங்களில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் சிபிசிஐடி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்த நித்தியராஜ் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, அந்த தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.