போரூரை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹாசினியை வன்புணர்வு செய்த தஷ்வந்த் என்பவருக்கு வழங்கியிருந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஹாசினி தந்தை பாபு.
அப்பொழுது அவர் கூறியதாவது:-
என் மகளுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. சுட்டியாக விளையாடிக் கொண்டிருந்தவள் என் மகள். மூன்றாவது படிக்கின்ற அவளுக்கு நல்லது எது கெட்டது எது என்று ஒன்றுமே தெரியாது. குட் டச் என்றால் என்ன? பேட் டச் என்றால் என்ன? என்று தெரியாதவள் அவள். ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தவளை திடீரென்று காணவில்லை. பதறிப்போய் தேடினோம். எங்கேயும் காணோம். காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் படுபாவி அவளை துன்புறுத்தி எரிச்சுக் கொன்றுவிட்டான். அவன் ஒரு கொலைகாரன். அவனுக்கு கொடுத்த குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு எங்கள் வேதனையை அதிகரித்துள்ளது.
எப்படியும் கொலையாளிக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் குற்றவாளி அவனை தண்டிக்காமல், நீதிமன்றம் எங்களை தண்டித்துவிட்டது. நான் இப்போதும் என் மகளுக்காக இங்கே வந்து உட்காரவில்லை. நாளை என் மகளை போல இன்னொரு குழந்தை பாதிக்கப்பட்டுவிட கூடாது என்று வந்து பேசுகிறேன்” என்று பேசினார்.