தமிழ்நாடு

சென்னை அரசுப் பள்ளியில் தீ விபத்து-ஒத்திகை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறை

சங்கீதா

சென்னையில் அரசுப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர்களின் புத்தக பைகள் எரிந்தநிலையில், உடனடியாக புத்தக பைகள் வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாமல், தீயணைப்புத்துறை இணை இயக்குநர் ஒத்திகை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சென்னை அரும்பாக்கம் டிஎஸ்டி நகரில் சென்னை நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜியில் இருந்து 8-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் தங்கள் புத்தக பைகளை வகுப்பறையில் வைத்து விட்டு பள்ளி வளாகத்தில் காலை பிரார்த்தனை வகுப்பிற்கு ஒன்று கூடினர்.

7-ம் வகுப்பைச் சேர்ந்த 25 மாணவிகள், 2-வது தளத்தில் தங்களது புத்தக பைகளை வைத்து விட்டு, காலை பிரார்த்தனைக்கு வந்து விட்டனர். திடீரென 2-வது தளத்தில் இருந்து கரும்புகை வந்து பரபரப்பு ஏற்பட்டது. உடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, மாணவ-மாணவிகளை வளாகத்திலிருந்து பத்திரமாக வெளியே அழைத்து சென்றார்.

மேலும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் 2-வது தளத்திற்கு சென்று பார்த்தபோது, மாணவர்களின் புத்தக பைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பள்ளி ஆசிரியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பிறகு தீயணைப்புத்துறை வந்தப்பிறகு, கரும்புகை வெளியேற்றப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது.

இந்நிலையில், பள்ளியில் தீ விபத்து என தகவல் அறிந்து, தமிழ்நாடு தீயணைப்பு துறையின் இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தீயணைப்பு துறையினரிடம் நடந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டாலும் தொடர்ந்து பரவாமல் முறையாக அணைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அங்கு 25 மாணவர்களின் புத்தக பைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானதால், மாணவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இதையறிந்து தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், சொந்த செலவில் உடனடியாக புத்தக பைகளை வாங்கி மாணவர்களுக்கு வழங்கினார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

அதன்பிறகு பள்ளி மாணவர்களிடம் இதுபோன்ற தீ விபத்தின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என தீயணைப்புத் துறையினர் ஒத்திகை செய்து காட்டினர். அங்குள்ள மாணவர்கள் தீ விபத்தின் போது எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் 25 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

தீ விபத்தின் போது மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது மட்டுமல்லாது, ஆசிரியர்கள் சாதுரியமாக சேர்ந்து தீயை அணைத்த விதத்தை, பிரியா ரவிச்சந்திரன் வெகுவாக பாராட்டினார். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாது, உடனடியாக ஆசிரியர்களுடன் சேர்ந்து தீயை அணைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி.

பாட புத்தகங்கள் தீயில் கருகி விட்டதால், அதனை உடனே வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் தீ விபத்தை எப்படி கையாள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் இதனை சுலபமாக எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

பள்ளியில் தீ விபத்து நிகழ்ந்தால் தீயை அணைப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பான்கள் உள்ளிட்டவை வைத்திருப்பதாகவும், எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் தீ விபத்தின்போது அவசரமாக வெளியேறுவதற்கான கட்டமைப்பை பள்ளியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் மாடியில் உள்ள வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் வெளியே செல்வதற்கான அவசர வழி எதுவுமில்லை. அவசர வழி ஏற்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறையிடம் கேட்டுள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கையாலும், தீயணைப்புத்துறையினர் புது புத்தகப் பைகள் வாங்கித் தந்ததால் குதூகலத்துடன் பள்ளி மாணவர்கள் மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர்.