சென்னையில் நீண்ட நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்றிரவு நகரின் பல்வேறு இடங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கோயம்பேடு, ஆலந்தூர், பெரம்பூர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வடபழனி, கொளத்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இரவில் பெய்த மழையால் சாலையில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
அதேபோல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பூந்தமல்லி, ஆவடி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சியில் பேருந்து நிலையம், திருவெறும்பூர், துவாக்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. பேருந்து நிலையம் அருகே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வாரங்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.