தமிழ்நாடு

பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!

webteam

தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயை போகும் இடமெல்லாம் தன்னுடனே அழைத்துச்சென்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சென்னையைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபர்.

நன்றியுள்ள பிராணி நாய் என்பார்கள். சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை நாய் என்று கூறினாலே கோபப்படுவார்கள். அதற்கு பெயர் வைத்து குழந்தை போல வளர்த்து வருபவர்கள் பலர் இங்குண்டு. பதிலுக்கு செல்லப்பிராணியான நாயும் கூட பாசத்தை பல மடங்கு திருப்பித்தரும். அப்படி தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயை தான் போகும் இடமெல்லாம் தன்னுடனே அழைத்துச்செல்கிறார் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் பிரேம்.

முதுகில் சாப்பாடுகள் அடங்கிய பெரிய பையை மாட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தின் முன்பகுதியில் தன் நாயை நிற்க வைத்துகொண்டு சென்னையை வலம் வரும் பிரேமை அனைவரும் ஆச்சரித்துடனே பார்த்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள பிரேம், ''என் நாயின் பெயர் பைரவி. செல்லமாக பைரு என்று அழைப்பேன். நான் 3 வருடங்களாக ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்து வருகிறேன். பைருக்கு தற்போது ஒன்றரை வயது ஆகிறது. கிட்டத்தட்ட 1 வருடங்களாக அது என்னுடன் தான் பயணம் செய்கிறது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். அதனால் பைரு தனியாக இருக்கவேண்டுமே என்று யோசித்தேன். அப்போது தான் என்னுடனையே அழைத்துச்செல்லலாம் என்ற எண்ணம் வந்தது. 

அன்று முதல் என்னுடன் தான் பைரு பயணம் செய்கிறாள். பைருவால் எந்த தொல்லையும் எனக்கு கிடையாது. மனிதர்களைப் போல அவ்வளவு அறிவுடன் சொல்வதைக் கேட்டு அது நடந்துக்கொள்ளும். அது என்னுடன் பயணிப்பதால் எனக்கும் அலுப்பு தெரியாது. அதேபோல பைருவால் வாடிக்கையாளர்களுக்கும் இதுவரை பிரச்னை எழுந்தது இல்லை. யாரையும் அச்சுறுத்தவோ, கடித்ததோ இல்லை. மழை நேரங்களில் கூட பைரு என்னுடன் தான் இருப்பாள். அவளுக்கும் ஒரு மழை கோட் தயார் செய்து வைத்துள்ளேன். இருவருமே  ஒருநாளைக்கு 10 முதல் 12 மணி நேரங்கள் சென்னையை வலம் வருகிறோம்'' என தெரிவித்தார்.

'போகலாம் பைரு' என்றவுடன் சமத்தாக இரு சக்கர வாகனத்தின் முன் ஏறி அமர்ந்துகொள்கிறது செல்லப்பிராணி பைரு. பைருவை கால்களுக்கு இடையே அணைத்தபடி அடுத்த ஆர்டரை நோக்கி விரைந்துகொண்டிருக்க தலையை வெளியே நீட்டி காற்றை கவ்விப்பிடிக்கிறாள் பைரு.