காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அலைமோதிய கூட்டம் pt desk
தமிழ்நாடு

சென்னை | மீன்பிடி தடைக்காலத்தால் கிடுகிடுவென உயரும் விலை - கவலையில் மீன் பிரியர்கள்!

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மீன்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: கிறிஸ்துராஜன்

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ம் தேதி தொடங்கியதை அடுத்து வரும் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த, 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். எனினும், மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி இருப்பதால், மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துக் காணப்படுகிறது.

மீன் விலை நிலவரம்

இதையடுத்து 1 கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, சங்கரா ரூ.350ல் இருந்து ரூ.400-ஆகவும், இறால் ரூ.300-ல் இருந்து ரூ.400-ஆகவும், சீலா ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும் கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.