பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கட்டணம் 50% உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கட்டண உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். உடனடியாக கட்டண உயர்வைத்திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், சென்னை கவின் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு வெளியே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலி போல் நின்றனர்.