தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி ஒருவர் ஆந்திராவில் பிடிபட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியாக இருப்பவர் ஆற்காடு சுரேஷ். இவர் மீது வழக்கறிஞர் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 7 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் சுரேஷ் மீது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளன. தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறைக்கு சென்று வெளிவந்துள்ள சுரேஷ், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இதனால் புளியந்தோப்பு போலீசார் கடந்த சில நாட்களாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, புளியந்தோப்பு தனிப்படை போலீசார் ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜேஷ் ஆகியோரை பிடிக்க ஆந்திர சென்றனர். அங்கு இருவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.