தமிழ்நாடு

கடனை அடைக்க கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டு : நூதன மோசடி

கடனை அடைக்க கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டு : நூதன மோசடி

webteam

சென்னையில் கடனை கொடுத்துவிட்டு அதனை திரும்ப வாங்கியவருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர், கடன் தொகையை திரும்பச் செலுத்தியவர் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலசுப்பிரமணியன் என்பவர் அளித்துள்ள புகாரில், ராஜேஷ் என்பவர் தனது காரை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 27ஆம் தேதி வட்டியுடன் கடன் தொகையை கொடுத்துவிட்டு ராஜேஷ் தனது காரை மீட்டுச் சென்றதாக கூறியுள்ளார். ராஜேஷ் கொடுத்த பணத்தை எண்ணிப்பார்த்த போது, அதில் 98 இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்ததாக புகாரில் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மொத்தம் ரூ.1.96 லட்சம் கலர் ஜெராக்ஸ் எடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ராஜேஷ் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். இதே போல் கடந்த 2016ஆம் ஆண்டு கடனை திருப்பிக் கொடுத்த போதும் ராஜேஷ் ஏமாற்றியதாகவும், உண்மை தெரிந்து கேட்ட பின்னர் நல்ல நோட்டுகளை கொடுத்ததாகவும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பலமுறை கேட்டும் பணம் தர மறுப்பதுடன் பணம் கேட்டு மிரட்டுவதாக தன் மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையுனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.