தமிழ்நாடு

நீர்வீழ்ச்சியை காண நண்பர்களுடன் பைக்கில் சென்றபோது விபத்து - பொறியியல் மாணவர் உயிரிழப்பு

PT

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு நீர்வீழ்ச்சியை காண நண்பர்களுடன் சென்றுக்கொண்டிருந்த பொறியியல் மாணவரொருவர், சோழவரம் அருகே சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சித்தலப்பாக்கத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இரு சக்கரவாகனங்களில் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வழியில், சோழவரம் அடுத்த காரனோடை என்ற பகுதியில் சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாணவர் கோபிநாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சென்ற மாதவரம் போக்குவரத்து காவல் துறையினர் படுகாயம் அடைந்த கிறிஸ்டோபரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த கோபிநாத் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான மாணவர் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருவதாகவும், ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஆந்திராவுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.