சென்னை ஆதம்பாக்கத்தில் ஆகாஷ் என்ற இளைஞரால் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரி இன்று நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்துஜா. இவரது பள்ளிக் கால நண்பர் ஆகாஷ். இந்துஜா மீது ஒருதலைக் காதல் கொண்ட ஆகாஷ், அவரையும் காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஆகாஷின் தொல்லை அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. ஆனால் இந்துஜா ஆகாஷின் காதலை ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் உள்ள இந்துஜாவின் வீட்டுக்கு வந்த ஆகாஷ், அந்தப் பெண் மீதும் அவரது தாயார் மற்றும் சகோதரி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஆகாஷ் சரணடைந்தார். விசாரணையில், ஆகாஷும், இந்துஜாவும் 5 வருடங்களாக காதலித்ததாக கூறியுள்ளார். தங்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரியும் என்றும், தனக்கு நிலையான வேலை இல்லை என்பதால் இந்துஜாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முயன்றதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தியில் இந்துஜாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்றதாக ஆகாஷ் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்துஜாவின் தாயார் மற்றும் சகோதரி இருவரிடமும் ஜார்ஜ் டவுன் நீதிபதி கஸிரா வாக்குமூலத்தை பதிவு செய்தார். சம்பவத்தன்று ஆகாஷ் வீட்டிற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் இந்துஜாவிடம் பேச அவரது தாய் அனுமதித்தாக கூறியுள்ளளார். இந்துஜாவின் சகோதரி தனது வாக்குமூலத்தில், ஆகாஷூடன் வாக்குவாதம் முற்றியபோது இந்துஜா மீது பெட்ரோல் ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்துவிட்டு அவன் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார்.