சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஐயாயிரம் டன்னிற்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பண்டிகைகள், விழாக்கள் என்றாலே ஆடம்பர கொண்டாட்டங்கள் அரங்கேறுவது வழக்கம். தீபாவளி பண்டிகை என்பதால் இந்த கொண்டாட்டம் இன்னும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் விளைவாக சென்னையில் மட்டும் 5000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு உள்ளிட்ட குப்பைகள் சுமார் ஐயாயிரம் டன்னிற்கும் அதிகமான அளவில் சேர்ந்துள்ளது.
15 மண்டலங்களை கொண்ட சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இருந்து நேற்று 64.55 டன் பட்டாசு குப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், சுழற்சி முறையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் வேங்கடமங்கல குப்பைகிடங்கிற்கும், தனியார் குப்பை கையாளும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 9.04 டன் பட்டாசு குப்பைகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் குப்பை கையாளும் நிறுவனத்துற்கு அனுப்பபட்டுள்ளது. மீதம் உள்ள பட்டாசு குப்பைகளும் அகற்றும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் பட்டாசு குப்பைகளை முழுமையாக அகற்ற இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பட்டாசு அல்லாத குப்பைகள் 5300 டன் குப்பைகள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம், ஆனால் தீபாவளி தினமான நேற்று மட்டும் 4800 டன் குப்பைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.