20 வருடங்களுக்கு முன்னர் சென்னை புளியந்தோப்பில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்தார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் நாகேஷ்வர் ராவ் மற்றும் சிவகாமி. இவர்களுக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார். இந்த சுபாஷ் 3 வயதில் ஆட்டோ ரிக்ஷா மூலம் கடத்தப்பட்டார். கடத்திய கும்பல் சிறுவனை மலேசியன் சமூக சேவை (எம்.எஸ்.எஸ்) என்ற நிறுவனத்திடம் சட்டவிரோதமாக விற்றது. இந்த நிறுவனம் சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்றுள்ளனர்.
அவ்வாறு விற்கப்பட்ட சுபாஷ் என்ற சிறுவன், அவினாஷ் என்ற பெயரில் அமெரிக்க தம்பதியினரிடம் வளர்ந்துள்ளார். அதேசமயம் அவரை பிரிந்த பெற்றோர் கவலையில் மூழ்கி தினந்தோறும் கண்ணீர் வடித்துள்ளனர். இதற்கிடையே நாகேஷ்வர் ராவ் மற்றும் சிவகாமி தொடர்ந்த வழக்கை நடத்தி வந்த வழக்கறிஞர் மோகனவடிவேலன் சரவணன், எம்.எஸ்.எஸ் நிறுவனத்திற்கு எதிராக வாதாடி வந்துள்ளார். அத்துடன் அந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற விசாரணையின் மூலம் கடத்தப்பட்ட சிறுவன் சுபாஷின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்துள்ளார். இதைக் கண்டுபிடிப்பதற்குள் 20 வருடங்கள் ஓடிவிட்டன.
இதற்குள் நாகேஷ்வர் ராவ் மற்றும் சிவகாமி ஆகியோர் தனது மற்றொரு மகன் லோகேஷ் மற்றும் மகள் சரளா ஆகியோருடன் வாழ்ந்த வந்தனர். இருந்தாலும் என்றாவது ஒருநாள் கடத்தப்பட்ட தனது மகனுடன் சேர்வோம் என நம்பிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களது நம்பிக்கை நினைவாகும் வகையில், சுபாஷ் (அவினாஷ்) போன் நம்பரை அவரது சகோதரி சரளாவிடம் வழக்கறிஞர் மோகனவடிவேலன் கொடுத்துள்ளார். இதையடுத்து வாட்ஸ் அப் மூலம், சுபாஷை தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம் பேசி உண்மையை புரிய வைத்துள்ளனர். அமெரிக்க தம்பதியினரிடம் வளர்ந்த சுபாஷ்க்கு தமிழ் தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அவரிடம் மோகனவடிவேலன் பேசி புரிய வைத்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவில் வளர்ந்தபோது வெள்ளை நிற மாணவர்களுக்கு மத்தியில் தான் மட்டும் மாறுபட்டு இருப்பதை உணர்ந்து வளர்ந்திருக்கிறார் சுபாஷ். மேலும் தனது பிறப்பின் உண்மை குறித்தும், தனது பூர்வீகம் குறித்தும் அறிந்துகொள்ளும் ஆவலுடன் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசியதால், உண்மைகளை புரிந்துகொண்டு குடும்பத்தினரை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி சென்னை வந்த அவர், தனது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். 20 வருடங்களுக்கு பின்னர் தனது மகனை சந்தித்த தாய், அவரை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இருந்தாலும் அவர்களால் நேரடியாக உரையாடிக்கொள்ள முடியவில்லை. பெற்றோருக்கு தமிழ் மட்டுமே தெரிய, மகனுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்துள்ளது. இருந்தாலும் அனைத்தையும் கடந்த அன்பால் அவர்கள் இணைந்துள்ளனர்.
இவர்களின் பிரிவிற்கு காரணமான எம்.எஸ்.எஸ் நிறுவனம் இதுபோன்று 300 குழந்தைகளை கடத்தி வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் முயற்சியில் அருண் டோஹ்ல் என்ற குழந்தை கடத்தலுக்கு எதிரான அமைப்பை சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார். அவரும் இந்த குடும்பத்தினர் இணைவதற்கு ஒரு காரணம். ஆனால் எம்.எஸ்.எஸ் நிறுவனம் கடத்தலில் ஈடுபட்டதை உறுதி செய்த சென்னை நீதிமன்றம், இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரூ.10 ஆயிரத்தை நாகேஷ்வர் குடும்பத்திற்கு அபராதமாக வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு மிகவும் கால தாமதமானது என நாகேஷ்வர் ராவ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் குழந்தைகளை போன்று ஏராளமான குழந்தைகள் மற்றும் பெற்றோர் இன்னும் பிரிவால் வாடுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் சுபாஷ், தான் தமிழ் பேச முடியாவிட்டாலும், கற்றுக்கொள்ள ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் தற்போது மீண்டும் அமெரிக்கா செல்வதாகவும், நடைமுறைகள் முடிந்த பின்னர் மீண்டும் தனது குடும்பத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்துமுறை வரும் போது, முடிந்த அளவிற்கு தமிழை கற்றுக்கொண்டு வரப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
(Courtesy : The News Minute)