பொது இடங்களில் குப்பை போடுபவர்கள் மீது 50 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள், சிறு மற்றும் பெரு வணிகர்கள், வியாபாரிகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது பொருந்தும். பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் குப்பைகளை போட்டுச் சென்றால் அவர்களுக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குடியிருப்பு வாசிகள் குப்பைகளை தெருக்களில் கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. குப்பைகளைப் பொது இடங்களில் போடும் வணிக வளாக வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாயும், அந்த வளாகத்தின் உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். சாலையோர வியாபாரிகள் குப்பைக் கழிவுகளை தொட்டியில் போடாமல் பொது இடங்களில் போட்டுச் செல்வது கண்டறியப்பட்டால் 100 ரூபாயும் அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற குற்றங்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் வெளியானவுடன், பல்வேறு பகுதிகளில் துப்புறவு ஆய்வாளர்கள் கண்காணித்து அபராதத் தொகையை வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.