தமிழ்நாடு

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு சமைக்கும் பணிகள் தீவிரம்

Sinekadhara

திருவிக நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக உணவு சமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

கனமழையால் வடசென்னை பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், ஓட்டேரி, பட்டாளம் போன்ற பல பகுதிகளின் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள சமூக நலக்கூடத்தில் மாநகராட்சி சார்பில் உணவு சமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 3 வேளையும் உணவு சமைத்து ஆட்டோக்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.

திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவிக நகரின் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம் கவி இன்று நேரில் வந்து ஆய்வு செய்தார். உணவு சமைப்பதற்கான காய்கறிகள், பொருட்கள், அரிசி மூட்டைகள் போன்றவை போதுமான அளவில் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்த அவர், அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார்.

இதையடுத்து எம்எல்ஏ தாயகம் கவி பேசுகையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கேஎம் கார்டன், காந்தி நகர், ஏரிக்கரை சாலை, மங்களபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.