கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி வழங்கி வரும் கவுன்சிலிங்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்துதல், நம் அன்றாட வாழ்வைப் பாதிக்கக்கூடிய ஒன்று. இது, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு, நம் மனம் அதற்குப் பழகுவது கொஞ்சம் கடினம்தான். எனவே, இந்தத் தனிமையில் பலருக்கு மனஅழுத்தம், மன உளைச்சல், தலைவலி, வெறுப்பு போன்றவை ஏற்படுவது இயல்புதான்.
தனிமையில் இருப்பவர்களிடம் அன்றாடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவி செய்வதுடன் மன அழுத்தத்தை போக்க சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும் நல் ஆலோசனை மையத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 9வது மண்டல அலுவலகத்தில் உள்ள மையத்தில் 4 தலைமை மருத்துவர்கள் கண்காணிப்பில் 17 பயிற்சி மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களது உடல்நலனை விசாரிப்பதுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகின்றனர்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எப்போதும் இணையத்தில் மூழ்கி இருக்காமல் புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, எழுதுவது என்று வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டும். அவை மன அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மனதிற்கு ஆரோக்கியம் தரும் செயல்கள் செய்தல், தேவையில்லாத கவலை, மன அழுத்தத்தைத் தவிர்ப்பதுடன் இந்தத் தனிமையிலும் இனிமை காணலாம்.