தமிழ்நாடு

சாலைப்பள்ளத்தால் முதியவர் மரணமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்

சாலைப்பள்ளத்தால் முதியவர் மரணமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்

webteam

சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார் எனக்கூறப்பட்ட நிலையில் மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். (56) இவர் கார் ஓட்டுநராக இருந்து வந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு கழிவுநீரும் மழைநீரும் சாலையோரமாக தேங்கியிருந்தது. அதேபோல் பாதாள சாக்கடையும் பாதி திறந்த நிலையில் இருந்தது.

இதையறியாமல் நடந்து வந்த நரசிம்மன் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சியின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் சாலையில் சாக்கடையை சரியாக மூடாததும் இதற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கோடம்பாக்கத்தில் மழைநீர் பள்ளத்தாலோ, கழிவுநீர் பள்ளத்தாலோ ஓட்டுநர் நரசிம்மன் இறக்கவில்லை எனவும் அவரது மரணத்திற்கு வேறு காரணம் இருக்கக்கூடும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நரசிம்மன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அந்த குறிப்பிட்ட சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.