தமிழ்நாடு

கவுதமி கொடுத்த முகவரிதான் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட காரணமா? - மாநகராட்சி விளக்கம்

கவுதமி கொடுத்த முகவரிதான் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட காரணமா? - மாநகராட்சி விளக்கம்

webteam

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. 

கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து சென்னையைக் காக்க, எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனையடுத்து, இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கொரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கமல்ஹாசனிடமே தெரிவிக்காமல் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாக முரளி அப்பாஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், “கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் கவுதமியின் பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கவுதமி சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பி வந்துள்ளார். அவரின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து எங்கள் ஊழியர்கள் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.