ரூ.284 கோடி நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தில் செயற்கை செலவுக் கூட்டல், சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் அமைத்தல், 500 மீட்டர் நடைபாதைக்கு 9 கோடி வரை கணக்கிடுதல் போன்ற கடுமையான முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, DPR மறுபரிசீலனை செய்து புதிய வெளிப்படையான டெண்டர்கள் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - m.மீரா
சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்படவிருந்த முக்கிய நடைபாதை திட்டப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறையைக் கவனிக்கும் தமிழக முதலமைச்சர் விஜய் பிறப்பித்த நேரடி உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ரூ 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 20 அன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர்.பிரியா முன்னிலையில் இந்த நடைபாதை மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக டெண்டர்கள் கோரப்பட்டன. நகரின் முக்கிய 35 மண்டலப் பிரிவுகளாக (Packages) இந்தத் திட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இறுதி ஒப்பந்ததாரர்கள் (L1) தேர்வு செய்யப்பட்ட போதிலும், அதிகாரப்பூர்வ பணி ஆணைகள் (Work Orders) வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட டெண்டர்களை மறுஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்த நிலையில் திட்டச் செலவை செயற்கையாக அதிகரித்தது, ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டரை அமைத்தது போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் திட்ட மதிப்பு வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கூட்டிக் காண்பிக்கப்பட்டதும், வெறும் 500 மீட்டர் நீளமுள்ள சாதாரண சிமெண்ட் நடைபாதையைச் சீரமைக்கக்கூட தலா 9 கோடி வரை கணக்கு காண்பிக்கப்பட்டதும் தெரிவந்துள்ளது.
இந்தக் காரணங்களால் 35 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து (DPR) மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்ச நிதி மதிப்பீட்டுடன் மிக விரைவில் புதிய வெளிப்படையான டெண்டர்கள் கோரப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.