தமிழ்நாடு

ஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி

webteam

ஏரியில் கழிவு நீரை விடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை மாநாகராட்சி அந்த முடிவை கைவிட்டுள்ளது. 


சென்னை புறநகர் பகுதிகளான கொரட்டூர், அம்பத்தூர், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து கழிவு நீரை வெளியேற்ற வழியில்லாமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீரை கொரட்டூர் ஏரியில் விட திட்டமிட்டனர். இதற்காக பல மாதங்களாக மூடிகிடந்த கால்வாயை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து வந்தனர். 

இந்தக் கழிவு நீரை ஏரியில் விடுவதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏனென்றால் கழிவு நீரை ஏரியில் விடுவதன் மூலம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளி வரும் கழிவு நீர் மற்றும் ரசாயன கழிவுகள் ஏரியில் மீண்டும் கலக்கும் எனப் புகார் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கொரட்டூர் ஏரியின் கால்வாய் உடைப்பதை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர். மக்களின் கடும் எதிர்ப்பிற்கு சென்னை மாநகராட்சி அதிகரிகள் பணிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் கழிவு நீரை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் சாலை மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்தச் சூழலிலும்  அப் பகுதி மக்களின் செயல் மிகவும் பாரட்டும் வகையில் அமைந்துள்ளது. தங்களது பகுதியில் உள்ள ஏரியில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாத்த மக்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.