தமிழ்நாடு

சவுகார்பேட்டை மூவர் கொலை சம்பவம்: புனேவில் போலீஸ் சேஸ்... 3 பேர் பிடிபட்டது எப்படி?

webteam

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக போலீசார் மகாராஷ்டிராவில் 3 பேரை சேஸ் செய்து கைது செய்துள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). இவரது மனைவி புல்ஷா பாய்(70). இவர்களின் மகன் ஷீத்தல்(40). இவர்கள் மூவரும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். ஜீவானம்சம் கொடுக்கவில்லை எனக்கூறி ஷீத்தலின் மனைவி ஜெயமாலாதான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக புனேவில் வைத்து ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் உட்பட 3 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை எப்படி சேஸ் செய்து பிடித்தார்கள் என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த வழக்கில் 5 தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டறிந்துள்ளோம். 3 முக்கிய குற்றவாளிகளை மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் கைது செய்துள்ளோம்.

ஷீத்தலின் மனைவி ஏற்கெனவே கணவர் குடும்பம் மீது புகார் அளித்திருந்தார். அதனால் அங்கிருந்து விசாரணையை தொடங்கினோம். சென்னை போலீஸ் டீம் விமானம் மூலம் புனே சென்றனர். சென்னை போலீசார் வருவதையறிந்து புனேவிலிருந்து சோலாப்பூர் தப்பினர். அங்கு புனே போலீசாரின் உதவியோடு சோலாப்பூர் சென்றோம்.

குற்றவாளிகளின் வண்டி எண்கள் போலீசாரிடம் இருந்ததால் எதிர் திசையில் அந்த குறிப்பிட்ட வாகனம் செல்வதை கண்டறிந்துள்ளனர். உடனே யு டர்ன் எடுத்து அந்த வண்டியை சேஸ் செய்தனர். அதையறிந்து அவர்கள் சுதாரித்து வேகமாக சென்றனர். ஆனால் போலீஸ் குழு விரட்டி பிடித்து அவர்களை கைது செய்தது. அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கின் உதவிக்காக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போலீசை கோரினோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். குடும்ப முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளது. அந்த துப்பாக்கி தமிழ்நாடுடையது கிடையாது. வெளியில் இருந்து வரும்போதுதான் கொண்டுவந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.