Chennai Corporation requested that residents segregate cracker waste. PTI
தமிழ்நாடு

சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகள் - மாநகராட்சி வேண்டுகோள்!

தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின், சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகளை அகற்ற 600 தூய்மை பணியாளர்களை மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தனியாகப் பிரித்துக் கொடுக்குமாறு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: துர்காதேவி சரவணன்

சென்னையில் நேற்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை சுமார், 200 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது பட்டாசு கழிவுகளை சீராக அகற்ற மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தில் சென்னை வாணவெடிகளால் மிளிர்ந்தன. பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 200 டன் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், நாளைக்குள் சுமார் 450 டன் கழிவுகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பட்டாசு கழிவுகளை தனியாகப் பிரித்து, தனிப் பைகளில் போட்டுத் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கைகளுக்கு மக்களிடமிருந்து எதிர்பார்த்த அளவு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பணியை விரைவுபடுத்த, நகரம் முழுவதும் கூடுதலாக 600 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிக்கப் பணியாளர்களுக்குச் சிறப்புப் பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேகச் செயலாக்க மையத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அங்கு அவை அறிவியல் முறையில், பாதுகாப்பாகக் கையாளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பட்டாசுக் கழிவுகளைச் சாதாரண வீட்டுக் குப்பையுடன் கலக்கவோ, சாலைகளில் வீசிவிட்டுச் செல்லவோ கூடாது என்று மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அவற்றைத் தனியாகப் பிரித்துத் துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.