சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மாறியதாலும், காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருவதாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த பல நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்த வருடம் பருவ மழையும் பொய்த்துப் போனதால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி வெயில் பல இடங்களில் 100 டிகிரியை கடந்து, உக்ரத்தின் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் மழை பெய்யாதா ? என மக்கள் வானத்தை பார்த்த வண்ணம் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் சில உள்மாவட்டங்களில் மழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை, பெரம்பலூர், ஊட்டி ஆகிய இடங்களில் மழை பொழிவு காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று வெயிலின் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் குறைந்து காணப்பட்டது. அத்துடன் காஞ்சிபுரத்தில் சட்டென மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழல் மக்களை மகிழச்செய்துள்ளது. சென்னையில் விரைவில் மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், மழை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.