சென்னையில் கனமழை
சென்னையில் கனமழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் கனமழை: பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! அமைச்சர் நேரில் ஆய்வு

Prakash J

வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாக இருக்கிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, வடமேற்குத் திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும். இதனால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, தமிழகத்தில் இடி மின்னலுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மிதமான மழையும், 7 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல், திருமுடிவாக்கம், வேளச்சேரி, பழவந்தாங்கல், அனகாபுத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் தற்போது பெய்த மழையில், சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கே நின்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் 2 பேர் மற்றும் பொதுமக்கள் 4 பேர் விபத்தில் சிக்கினர். 6 பேரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து எலும்பு முறிவு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் பங்க் ஊழியர் கந்தசாமி என்பவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர, சென்னை வேளச்சேரியிலும் பல இடங்களிலும், கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளின் பல பகுதிகளிலும் தண்ணீர் ஆறாய் ஓடியது. இதன்காரணமாக பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, டூவீலர்களில் செல்லும் மக்கள் அதிகம் சிரமப்பட்டுள்ளனர். பொதுவாக, சென்னையின் பல இடங்களில் பரவலாகப் பெயது வரும் கனமழையால் வாகன ஓட்டிகளைத் தவிர பொதுமக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.