தமிழ்நாடு

வங்கி கணக்கில் இழந்த பணத்தை மீட்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துக - ரிசர்வ் வங்கிக்கு கடிதம்

JustinDurai
ஆன்லைன் மோசடியில் வங்கி கணக்கில் இருந்து இழந்த பணத்தை உடனடியாக மீட்பதற்கு நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
மக்களிடம் ஏடிஎம் கார்டுகள் எண்கள், வங்கி விவரங்களை நூதன முறைகளில் பெற்று சைபர் மோசடிக் கும்பல்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பணத்தை இழந்தவர்களின் புகார்கள் அதிகரித்து வருவதாகவும் காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. சமீப காலமாக பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால், வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்து கொள்ளையர்கள் பணத்தை எடுக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அறிந்த வடமாநில சைபர் கொள்ளையர்கள் திருடிய பணத்தை ஆன்லைன் மூலம் அந்தந்த மாநில மின்வாரியத்தில் மின்கட்டணமாக செலுத்தி தரகர்கள் மூலம் ரொக்கமாக பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது. பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபின்னரே வங்கி நிர்வாகம் கொள்ளையடித்த பணத்தை முடக்குவதாகவும், இதற்கு ஏற்படும் காலதாமதத்தை சைபர் கொள்ளையர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்நிலை காவல் அதிகாரி கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினாலே, வங்கிகள் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளது.