சென்னையில் கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ரெட்டேரி பாலத்துக்கு கீழே வந்துகொண்டிருந்த போது கார் தட்சிணாமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த இரும்பு ட்ரம்களில் மோதி எதிர்புற சாலைக்கு வந்தது. ட்ரம்மில் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்த கார் சற்று நேரத்தில் வெறும் கூடாக உருகுலைந்தது. நிகழ்விடத்துக்கு வந்த வில்லிவாக்கம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
காரிலிருந்து தட்சிணாமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் போது கார் கதவு திறக்கமுடியாமல் பூட்டிக்கொண்டதால் தட்சிணாமூர்த்தியால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை என்று கருதப்படுகிறது. ரெட்டேரி பாலம் ஒருவழிப்பாதை என்பதால் புழலில் இருந்து வருபவர்கள் அதன்மேல் ஏறாமல் இருக்க சாலையின் குறுக்கே ட்ரம்கள் வைக்கப்பட்டு இருந்தது.