விஜய் Pt web
தமிழ்நாடு

விஜயின் பரப்புரை ரத்து | ’காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை..’ - என். ஆனந்த் விளக்கம்!

தவெக தலைவர் விஜயின் வில்லிவாக்கம் பரப்புரை இன்று திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில், பரப்புரை ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல், முதல் கட்ட பிரசாரம் தொடங்கிய நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து. காவல்துறை போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே காரணம் என பொதுச்செயலாளர் என். ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 5.73 கோடி வாக்களர்கள் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார்.

விஜய் வேட்புமனு தாக்கல்

இந்த சூழலில் தான், இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய்; தொடர்ந்து, இன்று தேர்தல் பரப்புரையையும் தொடங்கியிருக்கிறார். முன்னதாக, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிவித்திருந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால், பரப்புரை நடைபெறும் இடத்தில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விளக்கமளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல் இல்லை.

மேலும், முன்னெச்சரிகை நடவடிக்கைகள் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், விஜயின் பரப்புரைக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-கை சந்தித்து இன்று மனு அளித்திருந்தார்.