தமிழ்நாடு

ஓடும் காரில் இருந்து குதித்த தொழிலதிபர் - பதட்டமடைந்த கடத்தல்காரர்கள்

webteam

சென்னையில் தொழிலதிபரை கடத்தியதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த பிரமோத், அண்ணாநகரில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பிரமோத்தை 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்தியதாக கூறப்படுகிறது. பிரமோத்தை அவரது காருக்குள் தள்ளி, அதிலேயே அவரை கடத்திச் சென்றதாக தெரிகிறது. பாடி மேம்பாலம் அருகே மேலும் இருவர் காரில் ஏறியதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்து பிரமோத் குதித்ததாக தெரிகிறது.

இதனால் கடத்தல்காரர்கள் பதட்டமடைந்ததால் கார் விபத்தில் சிக்கியுள்ளது. பிரமோத்தையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர். இதனைக்கண்டு அவர்களை துரத்திச் சென்ற பொதுமக்கள், ஒருவரை மட்டும் விரட்டிப் பிடித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் ஓட்டேரியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பதும் பணத்துக்காக பிரமோத்தை கடத்தியதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் கடத்தலில் ஈடுபட்டதாக பிரான்சிஸ், பிரபாகர் மற்றும் இம்ரான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஓடும் காரிலிருந்து இருந்து குதித்த பிரமோத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.