Bomb threat pt desk
தமிழ்நாடு

சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சோதனையை அடுத்து புரளி என போலீசார் தகவல்

சென்னையில் வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். இரவு முழுவதும் காத்திருந்து காலையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

நேற்று நள்ளிரவு 12:15 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து போலீசார், மோப்ப நாய் பிரிவினர், வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆகியோர் நள்ளிரவில் கோயிலுக்கு வந்தனர்.

Murugan temple

அப்போது கோயில் நடை சாத்தியிருந்ததால், கோயிலின் வெளிப்புறங்களில் சோதனையிட்டனர். அதன் பிறகு அங்கு போலீசார் காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து கோயிலினுள் சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வெடிகுண்டு தொடர்பாக எந்தப் பொருளும் கிடைக்காததால் அது வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து காலை 6 மணியளவில் அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். போன் செய்த மர்ம நபர் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.