சென்னையில் வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில், 4-வது கொள்ளையனை சென்னை தனிப்படை போலீசார் ஹரியானாவில் கைது செய்தனர்.
சென்னையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் லட்சக்கணக்கிலான பணத்தை கொள்ளையடித்த ஹரியானா கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை, சென்னை போலீசார் ஒவ்வொருவராக கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ஹரியானாவைச் சேர்ந்த அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகிய கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் பல குழுக்களாக பிரிந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தப்பி உள்ளனர்.
அதில் ஒரு கும்பலின் தலைவனான ஹரியானாவைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரை ஹரியானவில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே பீர்க்கங்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜீம் உசேனின் தலைவனாக சவுகத்அலி இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நஜீம் உசேனின் ஹரியானா பதிவு எண் கொண்ட ஜீப்பில் தான் சவுகத் அலி சென்னை வந்து பணத்தை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மட்டும் சென்னையில் ரூ. 17 லட்சத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியானாவில் கைதான கும்பல் தலைவன் சவுகத் அலியை சென்னை கொண்டு வந்து விசாரித்த பிறகு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.