திருமாவளவன்
திருமாவளவன் pt web
தமிழ்நாடு

“ இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னை”- விசிக மாநாட்டில் தீர்மானம்

Angeshwar G

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தீர்மானங்களை வாசித்தார். அதன்படி “முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலை திறந்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசின் நடவடிக்கையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், அயோத்தியில் மசூதி ஒன்றை கட்டுவதற்காக நிலம் ஒதுக்கியதோடு, மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கச்செய்தது. ராமர் கோயில் திறப்புவிழா நடந்துள்ள நிலையில் மசூதிக்கான கட்டுமானப்பணிகள் துவங்கவே இல்லை. உச்சநீதிமன்ற ஆணைப்படி மசூதிக்கான கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டு.. மணிப்பூரில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டனர். பழங்குடியினரின் ஆயிரக்கணக்கான வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கும், பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தடையின்றி கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திடுக... இந்தியாவின் தலைநகர்ப் பகுதியாக இருக்கும் டெல்லி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இருப்பதாலும், காற்று மாசின் காரணமாக மனிதர்கள் சுகாதாரத்துடன் வாழும் இடமாக இல்லாமல் இருப்பதாலும் இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும் என இந்த மாநாடு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. அதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்தின் கிளை ஒன்றையும் நாடாளுமன்ற கட்டடம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என்று இந்த மாநாடு இந்திய ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறது” என தொடர்ந்து தீர்மானங்களை வாசித்தார்.