தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி - இரக்கமின்றி கைவரிசையை காட்டிய கொள்ளைக் கும்பல்

webteam

சென்னையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வருமான வரித்துறையினர் எனக்கூறி மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை, ஆதம்பாக்கம் ராம்நகரில் தனியாக வசித்து வருபவர் மூதாட்டி நீலா (80). இவரது இரண்டு மகன்களும் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், வருமான வரித்துறையினர் எனக்கூறி சிலர் விசாரித்துள்ளனர். அத்துடன் மூதாட்டியின் மூத்த மகன் வெங்கடேஷை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் இருந்து வரிஏய்ப்பு செய்து சம்பாதித்த பணத்தை கைப்பற்றியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மகன் கைது செய்யப்பட்டார் என்பதைக் கேட்ட மூதாட்டி ஆடிப்போனார். உடனே பதட்டம் தோற்றிக்கொள்ள, தன் மகனுக்கு ஒன்றும் தெரியாது, அவரை விட்டுவிடுங்கள் என புலம்பியுள்ளார். அப்பாவித்தனமான அவரது புலம்பலிலும் இரக்கமடையாத அந்த கும்பல், வீட்டின் பீரோ சாவியை அதட்டி வாங்கியுள்ளனர். பீரோவை திறந்து பார்த்தபோது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்துள்ளது. அதை எடுத்துக்கொண்ட அந்தக் கும்பல், அத்துடன் வளையல் உள்ளிட்ட 8.5 சவரன் தங்க நகையையும் எடுத்துக்கொண்டது.

‘மூதாட்டி நகையை ஏன் எடுக்குறீங்க? இது நாங்க கஷ்டப்பட்ட காசுல வாங்குனது. கொடுத்துடுங்க’ என கதறியுள்ளார். உங்க மகன் இதெல்லாம் வருமான ஏய்ப்பு செய்து வாங்கியது இல்லை என உறுதி செய்த பின்னர் தருகிறோம் எனக்கூறி வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர். மூதாட்டி பின்தொடர்ந்து நடந்து வர, சட்டென அவரை வீட்டிற்குள் தள்ளி, கதவை பூட்டிவிட்டு அந்தக் கும்பல் ஓடியுள்ளது. மூதாட்டி கூச்சல் போடுவதற்குள் அந்தக் கும்பல் வெகு தூரம் சென்றுவிட்டது.

பின்னர் மூதாட்டின் குரல் கேட்டு அக்கம்பத்தினர் கதவை திறந்துவிட, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிசிடிவி கேமராவின் காட்சிகளைக்கொண்டு திருடன்களை தேடிவருகின்றனர்.

(தகவல்கள் : சாந்தகுமார், புதிய தலைமுறை செய்தியாளர், தாம்பரம்)