சென்னை கோயம்பேட்டில் காவலரின் விரலை கடித்துத் துப்பிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஜெகதீஷ்.இவர் வீடு திரும்புவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அருகில் இளைஞர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அங்கு சென்ற ஜெகதீஷின் கவனத்தை திசை திருப்பிய நபர், அவரது கைப்பையை லாவகமாக பறித்துக் கொண்டு ஓடினார். தகவலறிந்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். அசுர வேகத்தில் திருடனை விரட்டிச் சென்ற கார்த்திக், சிறிது தூரத்திலேயே அவரை மடக்கிப் பிடித்துவிட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் காவலரின் வலது கை மோதிர விரலை கடித்துப் துப்பிய திருடன் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளான். துண்டான விரலில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாத காவலர் கார்த்திக், திருடனை மீண்டும் விரட்டிச் சென்று பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பையை பறிக்க முயன்று பிடிபட்ட திருடன், பல்லாவரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. சி.எம்.பி.டி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பிக் பாக்கெட் வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதிக நாட்கள் சிறையில் இருந்த காரணத்தால் அங்கு நடந்த லோக் அதாலத்தில் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், திருட்டில் ஈடுட்ட ஐயப்பன் மீண்டும் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐயப்பனுக்கு உடந்தையாக இருந்த பாரிமுனையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரல் துண்டான காவலர் கார்த்திக், அண்ணாநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.