லஞ்சம் பெற்றதாக சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாதேவி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பூமாதேவி பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்றை சோதனையிட்டதில், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அந்த வாகனத்தை அவர் பறிமுதல் செய்துள்ளார். இந்தச் சூழலில் முறையான ஆவணங்களுடன் காவல்நிலையத்திற்கு விரைந்த உரிமையாளர் கண்ணன், அதை காண்பித்து வாகனத்தை விடுவிக்கும்படி கேட்டுள்ளார். அப்போது காவல்நிலையத்தில் பிரிண்டர் இல்லாததால், அதை வாங்கித் தரும்படி, பூமாதேவி கேட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர் கண்ணன், இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணம் மூன்றாயிரத்தை பூமாதேவியிடம், கண்ணன் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், பூமா தேவியை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் லஞ்சம் கேட்டது உண்மை என தெரியவந்ததை அடுத்து, பூமாதேவியை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பூமா தேவியின் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.