திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள் அலமேலு தம்பதியினர். இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ள நிலையில் நான்காவது பிள்ளை சுரேஷ் (28), கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திருமங்கலம் பகுதியில் பழக்கடை வைத்துள்ள செண்பகவள்ளியின் (43) கணவர் நடராஜன் என்பவர், கடந்த ஒருவருடத்திற்கு முன்பு விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், சுரேஷுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள மற்றொரு நபருக்கும் செண்பக வள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் செண்பக வள்ளியை கண்டித்ததை அடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை முற்றியுள்ளது. இதனால், மனமுடைந்த சுரேஷ் செண்பகவள்ளி கண்முன்னே உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்து தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சுரேஷின் உடலை கொண்டு சென்றபோது மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)