தமிழ்நாடு

“என் பெற்றோரை காப்பாற்றுங்கள்” - கண்ணீர் மல்க முகநூலில் உதவிகேட்ட இளம்பெண்

kaleelrahman

பெற்றோரை காப்பாற்ற மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு முகநூலில் கண்ணீர் மல்க இளம்பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், ஷீலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. இவர், இன்று காலை முகநூலில் லைவ் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில், தான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும் தனக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சகோதரன் கொரோனா பாதித்து இறந்ததாக கூறிய அவர், தற்போது தனது தாயும் தந்தையும் கொரோனா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக தனது பெற்றோரை காப்பாற்ற உதவ வேண்டுமென கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார், இந்த வீடியோவை பார்த்த அனைவரும் தங்கள் வீட்டு மகளாய் அவரை எண்ணி உதவ முன்வர வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்தார். அதேபோல் முன்னதாக சகோதரனை இழந்த தான் மேலும் இரு உயிர் இழப்பை தாங்கக்கூடிய சக்தி கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்

இந்த அவசர உதவி கோரும் வீடியோ பதிவை முகநூலில் கண்ட பலரும் உடனடியாக அவருக்கு ஆதரவு கரம் நீட்டி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எந்தெந்த மருத்துவமனைகளில் உள்ளன என்ற விபரங்களையும் பண உதவியும் செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும். ஆனால், தற்போது வரை படுக்கை வசதி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கிறார்,

அவரது பெற்றோர் நுரையீரல் பாதிப்படைந்துள்ளதால் அதற்கு உரிய சிகிச்சையும் படுக்கை வசதியும் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். பிற மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை சிகிச்சை தேவை என பல்வேறு வீடியோ காட்சிகள் வைரலாகி வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.