காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு யானைகவுனி போலீசார் வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா. சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய ஜெயந்திரேன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ்ணு பிரியா, தனது சொந்த ஊருக்கு பயணம் செய்ய முடியாத நிலையில், யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த போலீசார் ஏற்பாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று தேங்காய், பழம் உட்பட 15 சீர்வரிசை தட்டுகள் மற்றும் 5 வகையான உணவுகளுடன் யானைகவுனி காவல் நிலையத்திலேயே விஷ்ணு பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தினர். ’எங்க வீட்டு பெண்ணுக்கு எப்படி வளைகாப்பு செய்வோமோ, அதே போல காவலருக்கு வளைகாப்பு செய்தோம்’ என யானைகவுனி போலீசார் தெரிவித்தனர்.
காவல் நிலையத்தில் சொந்த பந்தங்கள் போல காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி அறிந்து அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் இருந்தும் போலீசார் வந்து காவலர் விஷ்ணு பிரியாவை வாழ்த்திச் சென்றனர்