செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார், ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் கை பையை சோதனை செய்தனர். அந்த சூட்கேஸ் மற்றும் கை பையில் கஞ்சா இருப்பதைக் கண்ட போலீஸார் உடனே அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்த எபினேசர் என்பது தெரியவந்தது.
இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பட்டாபிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் கூலித் தொழிலாளிகள் மற்றும் வட மாநிலத்தவர்களுக்கு சில்லறை விற்பனை செய்ய கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.